இன்றைய இறைமொழி
புதன், 8 நவம்பர் 2023
பொதுக்காலம் 31-ஆம் வாரத்தின் புதன்
உரோமையர் 13:8-10. லூக்கா 14:25-33
திட்டமிடலும் முன்மதியும்
யார் சீடராக இருக்க முடியாது? யார் சீடராக இருக்க முடியும்? என்னும் இரண்டு கேள்விகளுக்கு விடையளிப்பதாக அமைந்துள்ளது இன்றைய நற்செய்தி வாசகம்.
1. யார் சீடராக இருக்க முடியாது?
(அ) உறவுகளையும் உயிரையும் இயேசுவைவிட மேலாகக் கருதுபவர்.
(ஆ) தம் சிலுவையைச் சுமக்க மறுப்பவர்.
(இ) உடைமைகளையெல்லாம் விட்டுவிடாதவர்.
இயேசுவை முதன்மையாகக் கொள்ளல், துன்பம் ஏற்றல், உடைமைகள் துறத்தல் ஆகியவை மட்டுமே சீடத்துவத்துக்கான படிக்கற்களாக அமைகின்றன.
2. யார் சீடராக இருக்க முடியும்?
(அ) கோபுரம் கட்டுபவர் போலத் திட்டமிடுபவர்
எந்தவொரு செயலைச் செய்யும்போதும் செயலின் இறுதிவரை சிந்திக்க வேண்டும் என்பது மேலாண்மையியல் பாடம். குறிப்பாக, வரவருக்கிற நன்மைகளைவிட, வர இயலுகிற தீங்குகளை மனத்தில் வைத்துச் சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது பல தவறுகளை நாம் தவிர்க்க முடியும். கோபுரம் கட்டுதல் என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிற இயேசு, கோபுரம் கட்டுகிறவர் கொண்டிருக்க வேண்டிய திட்டமிடல் சீடத்துவத்துக்கு அவசியம் என்கிறார். எந்தவொரு கட்டடப் பணிக்கும் திட்டமிடல் அவசியம். திட்டமிடாமல் எழுப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்படுவதையும் பாதியிலேயே நிற்பதையும் நாம் காண்கிறோம். திட்டமிடல் இல்லையென்றால் அங்கே ஆற்றல் விரயம், பொருள் விரயம் ஏற்படுவதோடு, மனஉலைச்சலும் மற்றவர்களின் கேலிப் பேச்சைக் கேட்கிற நிலையும் ஏற்படுகிறது. சீடராக இருக்க விரும்புகிறவர் தம் அடித்தளத்தை மட்டுமல்ல, மாறாக, கோபுரத்தின் இறுதி உச்சியை மனத்தில் வைத்துத் தன் பணியைத் தொடங்க வேண்டும்.
(ஆ) போருக்குச் செல்லும் அரசர்போல முன்மதி உடையவர்
போருக்குச் செல்லும் அரசர் என்பது இரண்டாவது உருவகம். இந்த உருவகத்தின்படி, அரசர் தம்மை எதிர்கொள்கின்ற மற்ற அரசரோடு தன்னை ஒப்பிட்டுத் தன் திறனை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். தன்னால் இயலாது எனத் தெரிந்தவுடன் அமைதிக்கான வழியைத் தேர்வு செய்கிறார். அமைதிக்கான வழியும்கூட வெற்றியின் வழியே என அறிந்தவராக இருக்கிறார் அரசர். தொடங்கிவிட்டோம், எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று நினைத்து இறுதியில் தோற்றுவிடுவதற்குப் பதிலாக முன்மதியோடு செயல்பட்டுத் தன் உயிரைக் காத்துக்கொள்கிறார். சீடராக இருக்க விரும்புகிறவர் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னையே ஆய்வுக்கு உட்படுத்துபவராகவும் முன்மதியோடு செயல்படுபவராகவும் இருக்க வேண்டும்.
மேற்காணும் இரண்டு உருவகங்களும் எதிரெதிரான கருத்துருகளைக் கொண்டிருப்பதுபோலத் தெரிகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றையொன்று நிரப்புகின்றன. திட்டமிடும்போது இறுதிவரை எண்ணிப்பார்க்க வேண்டும். செயல்படும்போது ஒவ்வொரு கட்டமாகச் செயல்பட வேண்டும். இயேசுவைப் பின்பற்றுதல் என்ற திட்டம் நீண்டதாகவும், செயல்பாடு ஒவ்வொரு கட்டமாகவும் நகர வேண்டும்.
நாம் கற்கிற பாடங்கள் எவை?
(அ) சீடத்துவம் என்பது ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்பு. இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள நம் முதன்மைகளைச் சரி செய்ய வேண்டும், துன்பம் ஏற்க வேண்டும், பற்றுகள் விட வேண்டும்.
(ஆ) நாம் மதிப்புக்குரியவர்கள். செல்வம் என்பது விடப்பட வேண்டியது என்று இயேசு சொன்னாலும், இயேசு பயன்படுத்துகிற உருவகங்கள் செல்வத்தை மையமாகக் கொண்டே இருக்கின்றன. கோபுரம் கட்டுபவர், அரசர் என்னும் மேன்மக்களை உருவகமாக வைக்கிறார் இயேசு. சீடத்துவத்தின் மேன்மையையும் மதிப்பையும் நாம் உணர வேண்டும். நாம் மதிப்புக்குரியவர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
(இ) அனைவருக்குமான அழைப்பு. சீடர்கள் என்றவுடன் பெரும்பான்மையான நேரங்களில் நாம் அருள்பணியாளர்கள் அல்லது துறவிகள் என நினைக்கிறோம். மேன்மையைப் பின்பற்றுதல் என்பது வாழ்க்கை எல்லாருக்கும் கொடுக்கிற அழைப்பு. தாழ்வானதை விட்டுவிட்டு மேன்மையைப் பற்றிக்கொள்ளும் அனைவரும் சீடத்துவத்தின் பாதையில் செல்கிறார்கள். ஆக, மேன்மையை நாடுதல் நம் வாழ்வியல் இலக்காக இருக்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், தன் அறிவுரைப் பகுதியை நிறைவுசெய்கிற பவுல், ‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ என மொழிகிறார். திருச்சட்டம் என்னும் கருத்துரு கொண்டு தன் மடலைத் திறந்த பவுல், அதே கருத்துருவைக் கொண்டு நிறைவு செய்கிறார். திருச்சட்டம் பிறரன்பாகக் கனிய வேண்டும் என்பதே பவுலுடைய அறிவுரை.
நிற்க.
‘இயேசுவின் சீடராக இருப்பவர் நம்பிக்கையில் நிலைத்திருந்து, சான்று வாழ்க்கை வாழ்ந்து, அறிக்கையிட்டு அவரை அறிவிக்க வேண்டும்’ எனக் கற்பிக்கிறது ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ (காண். எண் 1816).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment