இன்றைய இறைமொழி
ஞாயிறு, 5 நவம்பர் 2023
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் ஞாயிறு
மலாக்கி 1:14, 2:1-2, 8-10. 1 தெசலோனிக்கர் 2:7-9, 13. மத்தேயு 23:1-12.
தூரம் குறைத்தல்!
படைப்பின் இரண்டாம் கதையாடலின்படி, ஆணிடமிருந்து பெண்ணை உருவாக்கி அவனிடம் அழைத்து வருகிறார் கடவுள். பெண்ணைக் கண்டவுடன் ஆண், ‘இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்’ எனத் துள்ளிக் குதித்து, அவளுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தைக் கொண்டாடுகிறான். மேலும், தன் உடலைத் திறந்து கடவுள் விலா எலும்பை எடுக்கும் அளவுக்குக் கடவுளுக்கும் அவனுக்கும் நெருக்கம் இருந்ததை உணர்கிறான். ஆனால், விலக்கப்பட்ட கனியைத் தின்ற நிகழ்வுக்குப் பின்னர், ஆண்டவராகிய கடவுள் மனிதனோடு உரையாடுகையில், ‘நீர் என்னோடு இருக்குமாறு தந்த அந்தப் பெண் கனியை எனக்குத் தர, நானும் உண்டேன்!’ என்கிறான். கடவுளோடும் தன் சக மனிதரோடும் இருந்த நெருக்கம் மறைந்து தூரம் அவனைப் பற்றிக்கொள்கிறது.
இப்படி உருவான தூரத்துக்கும் ஏற்கெனவே இருந்த நெருக்கத்துக்கும் இடையே அவன் தன் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்.
இன்றைய நற்செய்தி வாசகம், மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல் என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி ஆர்ப்பரிப்புடன் எருசலேம் நகருக்குள் நுழைகிற இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இந்த நிகழ்வு அவர்களுடைய எதிரிகளின் கோபத்தைத் தூண்டுகிறது. அவரைப் பேச்சில் சிக்கவைக்கும் நோக்குடன் ஏரோதியர், சதுசேயர், மறைநூல் அறிஞர், பரிசேயர் என நான்கு குழுவினர் அவரிடம் வந்து கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு விடையளித்த இயேசு, அவர்களை நேரடியாகச் சாடுகிறார். இயேசுவின் சமகாலத்துச் சமயத்தில் நிலவிய வெளிவேடம், குறுகிய மனப்பான்மை, தூய்மை-தீட்டு பற்றிய புரிதல் ஆகியவற்றை இப்பகுதியிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் பார்த்து உரையாடுகிறார். இந்த உரையாடலின் கருத்துருகள் மூன்று: (அ) மறைநூல் அறிஞரின் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள தூரம் கடிந்துகொள்ளப்படுதல். (ஆ) தலைப்புகள் தவிர்த்தல். (இ) தாழ்ச்சி கொண்டிருத்தல்.
மறைநூல் அறிஞர்களின் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே தூரம் உள்ளது. ஏனெனில், அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதன்படி செயல்படுவதில்லை. அவர்களுக்கும் மக்களுக்கும் இடையே தூரம் இருக்கிறது. ஏனெனில், ரபி, தந்தை, ஆசிரியர் என்னும் தலைப்புகளால் தங்களை அலங்கரித்துக்கொண்டு மற்ற மக்களிடமிருந்து தள்ளி நிற்கிறார்கள். தங்கள் உள்ளத்தில் இறுமாப்பு கொண்டவர்களாகக் கடவுளிடமிருந்தும் தள்ளி நிற்கிறார்கள்.
ஆக, சொல்லுக்கும் செயலுக்கும் இடையே தூரம், தலைப்புகளால் வரும் தூரம், இறுமாப்பால் வரும் தூரம் ஆகியவற்றைத் தம் சீடர்கள் தவிர்க்க வேண்டும் என்பது இயேசுவின் பாடம்.
இன்றைய முதல் வாசகம் மலாக்கி நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இறுதி நூலாக இருக்கிற இந்நூல் ஏறக்குறைய கிமு 4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பாபிலோனிய நாடுகடத்தலிலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டி தங்கள் சமய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். செருபாபேல், எஸ்ரா, நெகேமியா, ஆகாய் போன்றவர்கள் நகரம், ஆலயம், குழுமம் கட்டியெழுப்பப்படுவதில் அக்கறை காட்டுகிறார்கள். மக்களோ தாங்கள் பெற்ற நாடுகடத்தப்படுதல் என்னும் தண்டனையை மறந்துவிடுகிறார்கள். சமய வாழ்விலும் சமூக வாழ்விலும் நிறையப் பிறழ்வுகள் ஏற்படுகின்றன. குருக்களோ இவற்றைக் கண்டித்து மக்களைத் திருத்தி வழிநடத்துவதற்குப் பதிலாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள், பிறழ்வுகளுக்குக் காரணமாகவும் இருக்கிறார்கள். இந்தப் பின்புலத்தில்தான் இறைவாக்கினர் மலாக்கி குருக்களைச் சாடுகிறார்.
அவர்கள் தங்கள் நெறிதவறிய நடத்தையால் ஆண்டவராகிய கடவுளிடமிருந்து தூரமாக நின்றார்கள். தவறான போதனையால் மக்களையும் கடவுளிடமிருந்து தூரமாக்கினார்கள். தூரம் குறைந்து நெருக்கம் வளரவில்லை என்றால், அவர்கள் தண்டிக்கப்பட்டு, தாழ்த்தப்படுவார்கள் என்பது கடவுள் வழங்கும் எச்சரிக்கையாக இருக்கிறது.
நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் மறைநூல் அறிஞர்களும், முதல் வாசகத்தில் காணும் குருக்களும் மக்களைவிட்டுத் தூரமாக இருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் வாசகத்தில் நாம் காணும் பவுல், தெசலோனிக்க நகர் திருஅவைக்கு மிக அருகில் இருக்கிறார். ‘தாய் தன் குழந்தையைப் பேணி வளர்ப்பது போலக் கனிவுடன் தான் நடந்துகொண்டதாகக் குறிப்பிடுகிறார். எபிரேயத்தில் ‘கனிவு’ என்னும் சொல்லின் உருவமே, ‘தாய் தன் குழந்தையைக் குனிந்து பார்த்தல்’ என்பதுதான். மேலும், ‘கடவுளின் நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்’ என்கிறார் பவுல். பவுலின் நெருக்கம் தற்கையளிப்பாக மாறி, திருஅவை உறுப்பினர்களோடு அவரையே இணைத்துக்கொள்வதாக இருக்கிறது.
இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் சவால் ஒன்றுதான்: தூரம் குறைத்தல்!
நம் சொல்லுக்கும் செயலுக்கும், நமக்கும் மற்றவர்களுக்கும், கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள தூரம் குறைய வேண்டும்.
(அ) சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தூரத்தை எப்படிக் குறைப்பது?
சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண் நம்மை மற்றவர்களின் பார்வையில் பொய்யர் அல்லது வெளிவேடக்காரர் என அடையாளப்படுத்துகிறது. இயேசுவே நமக்கு வழி கற்பிக்கிறார்: ‘உங்கள் பேச்சு ஆம் என்றால் ஆம் எனவும், இல்லை என்றால் இல்லை எனவும் இருக்கட்டும்’. நம்மால் இயலாதவற்றை வாக்களிக்கக் கூடாது. நம்மால் எது இயலுமோ அதை மட்டுமே மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
(ஆ) மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை எப்படிக் குறைப்பது?
‘ரபி,’ ‘போதகர்,’ ‘தந்தை,’ ‘ஆசிரியர்’ என்னும் தலைப்புகளால் மறைநூல் அறிஞர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், இத்தலைப்புகள் மனிதர்களுக்கு அல்ல, கடவுளுக்கு உரியவை எனச் சொல்லிக் காட்டுகிற இயேசு, தம் சீடர்களின் பார்வையை அகலமாக்குகிறார். கிறிஸ்துவே போதகராகவும் ஆசிரியராகவும் இருக்க, கடவுள் தந்தையாக இருக்கிறார். மேலும், ‘நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்’ என்கிறார் இயேசு. நாம் கொண்டிருக்கிற தலைப்புகள் நம்மை மற்றவர்களிடமிருந்து தூரமாக்கிவிடக் கூடாது. கூட்டியக்கத் திருஅவையின் அழைப்பும் இதுவே. ‘திருத்தந்தை, கர்தினால், ஆயர், அருள்பணியாளர், அருள்சகோதரி, பொதுநிலையினர்’ என்னும் தலைப்புகள் நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து தூரமாக்குகின்றன. ஆனால், ‘நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்’ என்னும் புரிதல் நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்கிறது.
(இ) கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை எப்படிக் குறைப்பது?
‘பெரியவர் என்னும் நிலை தொண்டு ஏற்பதால்தான் வருகிறது’ என் சொல்கிற இயேசு, ‘தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிற எவரும் உயர்த்தப்பெறுவர்’ என்கிறார். தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் கடவுள் மட்டுமே என்பதை இங்கே அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் இயேசு. தாழ்ச்சி நம்மைக் கடவுளுக்கு நெருக்கமாக்குகிறது. படைப்பின் தொடக்கத்தில் நம் முதற்பெற்றோர், ‘கடவுளைப் போல ஆக விரும்பி’ விலக்கப்பட்ட கனியை உண்கிறார்கள். விளைவு, அவர்களுடைய இறுமாப்பு கடவுளிடமிருந்து அவர்களைத் தூரமாக்குகிறது. நெருக்கம் வர வேண்டுமெனில் ‘தாழ்ச்சி’ அவசியம். தாழ்ச்சி என்பதற்கான ஆங்கிலப்பதம் ‘ஹியுமிலிட்டி’ என்பதாகும். இச்சொல்லின் இலத்தீன் மூலச்சொல் ‘ஹ்யூமுஸ்’. ‘ஹ்யூமுஸ்’ என்றால் ‘களிமண்’ என்பதாகும். களிமண்ணாக நாம் இருந்தபோதுதான் கடவுள் நம்மைத் தொட்டு மனிதராக உருவாக்கினார். களிமண்ணாக இருக்கும்போதுதான் கடவுளின் கரம் நம்மைத் தழுவி நிற்கிறது. நாம் வைத்திருக்கிற அனைத்து அடையாளங்களையும் இழக்க, இறுதியில் நிற்பது களிமண் மட்டுமே. இந்தக் களிமண் உணர்வே தாழ்ச்சி. இந்த உணர்வு நம்மைக் கடவுளோடு மட்டுமல்ல, ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது. இந்த உணர்வு ஒருவகையான உள்மனச் சுதந்திரத்தைத் தருகிறது. வெளிப்புறத்திலிருந்து வரும் அடையாளங்களைத் தாண்டிச் செல்ல உதவுகிறது.
இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 131), மிக அழகான சொல்லோவியத்தை நமக்குத் தருகிறது: ‘என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை, செருக்கு இல்லை, எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை’ எனச் சொல்கிற தாவீது, ‘அமைதியும் நிறைவும் கொண்ட நெஞ்சம் தாய்மடி தவழும் குழந்தைபோல’ இருக்கிறது என உருவகப்படுத்துகிறார்.
கடவுளின் தாய்மடியில் தவழும் குழந்தைபோல நாம் இருந்தால் நம் நெஞ்சில் அமைதியும் நிறைவும் குடிகொள்ளும். அமைதியும் நிறைவும் கொண்ட உள்ளம் கடவுளுக்கும் ஒருவர் மற்றவருக்கும் நெருக்கமாக இருக்கும்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment