இன்றைய இறைமொழி. சனி, 4 நவம்பர் 2023. முதல் இடத்திற்கு வாரும்!

இன்றைய இறைமொழி
சனி, 4 நவம்பர் 2023
பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் சனி
உரோமையர் 11:1-2, 11-12, 25-29. லூக்கா 14:1, 7-11.

முதல் இடத்திற்கு வாரும்!

‘முதலிடம் என்பது நாம் நாடுவதாக இல்லாமல், நமக்கு வழங்கப்படுவதாக இருக்கும்போது நாம் மதிப்பும் பெருமையும் பெறுகிறோம்.’

பரிசேயர் ஒருவருடைய வீட்டில் இயேசு உணவருந்துகிற நிகழ்வு ஒரே நேரத்தில் வல்ல செயலின் (நீர்க்கோவை நோய் நலமாதல்) தளமாகவும், (தாழ்ச்சி பற்றிய) போதனையின் தளமாகவும் அமைகிறது.

இயேசு தம்மைச் சுற்றி இருப்பவற்றை, இருப்பவர்களை, நடப்பதை, நடப்பவர்களைக் கூர்ந்து கவனிப்பவராக இருக்கிறார். சமூக அறிவு (social intelligence) பெற்றவர்கள் இவ்வாறே செயல்படுவர். கூர்ந்து கவனிப்பதால் கிடைக்கும் அறிதலைப் பயன்படுத்தி அதற்கேற்ப பதிலிறுப்பு செய்கிறார்.

பரிசேயரின் இல்லத்திற்கு இயேசு அழைக்கப்பட்ட அதே நாளில் மற்றவர்களும் அழைக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் முதன்மையான இருக்கைகளை நாடி அமர்கிறார்கள். ஒருவேளை அவர்கள் இயேசுவின் அருகில் வந்து அமர விரும்பியிருக்கலாம்.

இருக்கையின் முதன்மை என்பது இடம் சார்ந்தது. பேருந்து, இரயில், விமானங்களில் ஜன்னலுக்கு அருகில் உள்ள இருக்கைகள் முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன. திரையரங்களில் கடைசி வரிசை இருக்கைகள் முதன்மையான இருக்கைகளாக மாறுகின்றன. விருந்து மற்றும் பொதுவான நிகழ்வுகளில் முதல் வரிசை இருக்கைகள் முதன்மையான இருக்கைகளாகத் திகழ்கின்றன.

முதன்மையான இருக்கையை நாம் தேடுவதற்குக் காரணங்கள் எவை? (அ) பெருமை உணர்வு. ‘நான் மற்றவரைவிடப் பெரியவர் அல்லது சிறந்தவர்’ என்னும் உணர்வு இயல்பாகவே நம்மிடம் உள்ளது. நமக்கு அடுத்தவருக்கு அருகில் வந்தவுடன் நம் மூளை நம்மை அறியாமல் நம்மை அவரோடு ஒப்பிடத் தொடங்குகிறது. இந்த ஒப்பீட்டின் வெளிப்பாடே பெருமை உணர்வு. (ஆ) நம் பெருமையை நமக்கு வெளியே அல்லது மற்றவர்கள் வழியாகத் தேடுவது. மற்றவர்களின் விருப்பும் ஏற்பும் நம் மதிப்பை நிர்ணயிக்க நம்மை அனுமதிப்பது. (இ) தாழ்த்தப்பட்டுவிடுமோ என்னும் அச்சம். இந்த அச்சம் காரணமாக தன்முனைப்பு தொடங்குகிறது.

இயேசு தரும் பாடங்கள் எவை?

(அ) முதலிடத்தை நீங்களாகவே எடுக்க வேண்டாம்! ஏனெனில், மற்றவர்கள்முன் நீங்கள் வெட்கத்துக்கு உள்ளாக்கப்படலாம்.

(ஆ) முதலிடம் உங்களுக்குத் தரப்படும்போது மறுக்க வேண்டாம்! ஏனெனில், மற்றவர்கள்முன் நீங்கள் பெருமை அடைவீர்கள்.

‘தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்’ என்னும் ஞானக்கூற்றோடு நிறைவுபெறுகிறது நற்செய்தி வாசகம்.

‘நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை! எதையும் மறுப்பதில்லை!’ என்னும் மனநிலையில் வாழ்பவர்கள் மற்றவர்களின் கண்களில் அல்ல, தங்கள் கண்களிலேயே மிகுதியான மதிப்பு பெறுகிறார்கள்.

விருந்தில் அவமதிக்கப்படுதல், அழைப்பிதழில் பெயர் விடப்படுதல், நன்றியுரையில் பெயர் மறக்கப்படுதல், தகுதியில்லாத ஒருவருக்கு மதிப்பு வழங்கப்படுதல், நாம் செய்கிற வேலைக்கு இன்னொருவர் பெயரெடுத்தல், அல்லது நாம் கண்டுகொள்ளாமல் விடப்படுதல் போன்றவை ஆறாத வடுக்களை நம்மில் ஏற்படுத்த நாம் அனுமதிக்கிறோம். மற்றவர்களின் கண்களில் அல்ல, மாறாக, நம் கண்களில் நாம் மதிப்புக்கு உரியவர்களாக வாழ்தலே முதன்மையானது.

மற்றவர்கள் தரும் மதிப்பு 100 இருந்து, தன்மதிப்பு 0 என இருந்தால் நம் வாழ்க்கை இரங்கத்தக்கது! மற்றவர்கள் தரும் மதிப்பு 0 என இருந்தாலும், தன்மதிப்பு 100 என இருந்தால் நம் வாழ்க்கையில் நாம் வெற்றியாளர்களே!

இன்றைய முதல் வாசகத்தில், தன் சொந்த இனத்தவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமற்போனது பற்றி வருந்துகிறார் பவுல். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் முதலிடம் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், நம்பிக்கையில் புறவினத்தார்கள் முதலிடத்துக்கு நகர்ந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் முதலிடம் பெற்ற யூத மக்கள் நம்பிக்கையிலும் முதலிடத்துக்கு வருவார்கள் என்பது பவுலின் எதிர்நோக்காக இருக்கிறது.

‘முதலிடம் என்பது நாம் நாடுவதாக இல்லாமல், நமக்கு வழங்கப்படுவதாக இருக்கும்போது நாம் மதிப்பும் பெருமையும் பெறுகிறோம்.’

நிற்க.

‘தாழ்ச்சி என்பது இறைவேண்டலில் நாம் கொள்ள வேண்டிய அடிப்படைக் கூறு. இறைவனின் முன்னிலையில் நம்மைப் பெருமைக்கு உரியவராக மாற்றுவது தாழ்ச்சியே’ எனக் கற்பிக்கிறது ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ (எண். 2559).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment