இன்றைய இறைமொழி. வெள்ளி, 3 நவம்பர் 2023. விதிவிலக்கும் விதியே!

இன்றைய இறைமொழி
வெள்ளி, 3 நவம்பர் 2023
பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் வெள்ளி
உரோமையர் 9:1-5. லூக்கா 14:1-6

விதிவிலக்கும் விதியே

‘விதிவிலக்கும் விதியே என உணர்கிறவர் தம்மால் செய்ய இயலுகிற நன்மையைத் தொடர்ந்து செய்வார்.’

பரிசேயர் ஒருவருடைய வீட்டில் ஓய்வுநாளில் விருந்துண்கிற இயேசு, அங்கிருந்த நீர்க்கோவை நோய்பீடித்தவருக்கு நலம் தருகிறார். ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையே என இயேசு பரிசேயர்களுக்குக் கற்றுக்கொடுப்பது போல உள்ளது இந்த நிகழ்வு. நீர்க்கோவை என்னும் நோய் ஆங்கிலத்தில் ‘ட்ராப்ஸி’ என அழைக்கப்படுகிறது. ‘ஹைட்ராப்ஸி’ (‘ஹைட்ரோ’ என்றால் தண்ணீர்) என்னும் சொல்லே சுருங்கி ‘ட்ராப்ஸி’ என வழங்கப்படுகிறது. திசுக்களுக்கு இடையே தண்ணீர் கோர்த்துக்கொள்ள, அந்த இடத்தை அமுக்கினால் உடலில் குழி விழும். இது வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய் அல்ல. ஆனாலும், இயேசு அதைக் கண்டுகொள்கிறார்.

எந்த இடத்திற்குச் சென்றாலும் இயேசு அந்த இடத்தின் தலைவராக மாறிவிடுகிறார். ஓய்வுநாள், பரிசேயரின் விருந்து, விருந்தினர்கள் என எதுவும் யாரும் இயேசுவின் நற்செயலைத் தடுக்க இயலாது. அவர் தாம் செய்ய விரும்புகிற நன்மையைச் செய்துகொண்டே வழிநடக்கிறார் (காண். திப 10:38). நன்மை செய்வதற்கு ஓய்வுநாள் தடை இல்லை என்பது தம்முடைய கருத்து என்றாலும், விருந்தில் அமர்ந்திருந்த பரிசேயர்களை முன்வைத்து, ‘ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?’ எனக் கேட்கிறார். அவர்கள் இயேசுவுக்குப் பதில் அளிக்காமல் அமைதி காக்கிறார்கள். நோயுற்றவருக்கு நலம் தந்தவுடன், ‘உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிட மாட்டாரா?’ எனக் கேட்டார். பதில் அளிக்காமல் முன்னர் அமைதி காத்தவர்கள், பதில் அளிக்க இயலாமல் இப்போது அமைதி காக்கிறார்கள்.

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள்:

(அ) விதிவிலக்கும் விதியே! ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்கு உண்டு. விதிவிலக்குகளும் விதியாக மாறக்கூடிய சூழல்கள் உள்ளன என்பதை நாம் உணர வேண்டும். ஓய்வுநாள் என்பது விதி என இருந்தாலும் ஓய்வுநாளில் உயிர்காத்தல் என்ற விதிவிலக்கு இருந்தது என்பதை இயேசு பரிசேயர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

(ஆ) தலைவர் மனநிலை! இயேசு எந்தச் சூழலிலும் தலைவர் மனநிலை (Master mindset) கொண்டிருக்கிறார். தாம் இருக்கிற சூழலைத் தமக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ளக்கூடியவர் தலைவர். தாம் இருக்கிற சூழலுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளக் கூடியவர் அடிமை. தலைவர் மனநிலையில் நாம் விரும்புகிற நன்மையை நம்மால் செய்ய இயலும். அடிமை மனநிலை (Slave mindset) கொண்டிருப்பவர் நன்மை செய்ய நினைத்தாலும், ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?’ எனத் தமக்குள் சொல்லி அமைதி காப்பார். மேலும், நீர்க்கோவை பீடித்தவரைத் தம் பிள்ளை போல நினைத்து கிணற்றிலிருந்து (தண்ணீர் நோயிலிருந்து) தூக்கிவிடுகிறார் இயேசு.

(இ) தன்வரையறைகள் தவிர்த்தல்! பல நேரங்களில் நமக்கு நாமே வரையறைகளை (self-limiting beliefs) வகுத்துக்கொண்டு, ‘இதுதான் நான்! இவ்வளவுதான் முடியும்!’ என நினைத்துக்கொள்கிறோம். மனித ஆற்றல் எல்லையற்றது. சமயம், சடங்கு, சமூகம் என அனைத்தையும் மீறிச்செல்லும் ஆற்றல் அதற்கு உண்டு. தன்வரையறைகளை மீற வேண்டுமெனில் தன்ஐயம் விடுக்க வேண்டும். தன்வரையறைகளை மீறுவதற்கான பெரிய தடை மற்றவர்களை மகிழ்விக்க நினைக்கும் நம் மனப்பாங்கு. ஓய்வுநாள்படி நடந்து பரிசேயர்களை மகிழ்வித்தால் அவர்கள் தம் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவா போகிறார்கள்? இல்லை! தம் எதிரிகளை மகிழ்விக்கும் எண்ணம் இயேசுவுக்கு எப்போதும் இல்லை. என் வரையறையிலிருந்து நான் என்னை விடுவித்தால் எல்லா வரையறைகளையும் என்னால் தாண்ட முடியும். ஏனெனில், நன்மையும் தீமையும் சூழலைப் பொருத்தே வரையறுக்கப்படுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது தனக்குத் துயரம் தருகிறது என எழுதுகிறார் பவுல். யூதர்கள் தங்கள் வரையறைகளுக்குள் நின்றுகொண்டனர். பவுலோ வரையறைகளைத் தாண்டியதால் இயேசுவைக் கிறிஸ்துவாகக் கண்டுகொண்டார்.

‘விதிவிலக்கும் விதியே என உணர்கிறவர் தம்மால் செய்ய இயலுகிற நன்மையைத் தொடர்ந்து செய்வார்.’

நிற்க.

‘பொதுநன்மை’ பற்றிப் பேசுகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி,’ ‘ஒவ்வொரு தனிநபரும் மனித மாண்பை முன்நிறுத்திச் செயல்படுவதற்கான பங்கேற்பை மனமுவந்து தாராளமாக அளிக்கும்போது பொதுநன்மை சாத்தியமாகிறது’ எனப் போதிக்கிறது (காண். எண் 1913-1917).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment