இன்றைய இறைமொழி
செவ்வாய், 31 அக்டோபர் 2023
பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் செவ்வாய்
உரோமையர் 8:18-25. லூக்கா 13:18-21
காணாத ஒன்றை எதிர்நோக்கி!
‘எதிர்நோக்கும் தளரா உள்ளமும் கொண்டிருந்தால் சிறியவை பெரியனவாக வளர்ந்து மாற்றம் விளைவிக்கும்.’
இறையாட்சி பற்றிய இயேசுவின் உருவகங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. இயேசுவின் உருவகங்கள் வெகுசன மக்களுக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறையாட்சியை கடுகுவிதை மற்றும் புளிப்புமாவுக்கு ஒப்பிடுகிறார் இயேசு.
முதலில் இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்றால் திருஅவை, விழுமியங்கள், இறப்புக்குப் பின் வாழ்வு என்று நிறையப் புரிதல்கள் உள்ளன. ஆனால், இறையாட்சி என்பது இயேசு. அவ்வளவுதான்! அதனால்தான், ‘இறையாட்சி உங்கள் நடுவே இருக்கிறது (லூக் 17:21), ஏனெனில் நான் உங்கள் நடுவே இருக்கிறேன்’ என்கிறார் இயேசு. இயேசு இயங்கும் இறையாட்சித் தளம் இந்த உலகம்.
(அ) கடுகுவிதை
யூதர்கள் கடுகுவிதையை எல்லா விதைகளிலும் மிகச் சிறியதாகக் கருதினார்கள் (காண். மத் 13:31-33, மாற் 4:30-32). இயேசுவும் ‘கடுகளவு நம்பிக்கை’ (காண். லூக் 17:6) என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தும்போது, கடுகின் சிறிய வடிவத்தையே குறிப்பிடுகிறார். ‘கடுகு’ என்பது ‘ஸினாப்பிஸ் நீக்ரா’ என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் விதை. இத்தாவரம் நான்கு அடிகளிலிருந்து பதினைந்து அடிகள் வரை வளரும். ஆகையால் இதை மரம் என்றும் அழைப்பர். இயேசு கடுகுவிதையின் வளர்ச்சியைப் பற்றிப் பேசினாலும், அவருடைய அழுத்தம் கடுகுவிதையின் தொடக்கம் மற்றும் இறுதியைப் பற்றியே இருக்கிறது. சிறிய தொடக்கம். ஆனால், பெரிய முடிவு. சிறிய விதை பெரிய மரமாகிறது.
இங்கே மற்றொரு வாக்கியத்தையும் இயேசு சொல்கிறார்: ‘வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.’ இயேசுவின் ‘விதைப்பவர்’ எடுத்துக்காட்டில், ‘பறவைகள்’ விதைகளின் எதிரிகளாக இருக்கின்றன (காண். லூக் 8:5, 12). ஆனால், இங்கே அவை விருந்தினர்களாக இருக்கின்றன. இறையாட்சி என்ற கடுகுமரம் பறவைகளை விரட்டியடிக்கும் ‘செல்ஃபோன் டவர்’ அல்ல, மாறாக, பறவைகளை ஈர்த்து அவற்றுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும் கடுகு மரம். ‘பறவைகள்’ என்பது புறவினத்தாரைக் குறிப்பதாகத் திருஅவைத் தந்தையர் விளக்கம் கொடுக்கிறார்கள் (காண். தானி 4:12, 21, திபா 104:13, எசே 17:23).
(ஆ) புளிப்புமாவு
புளிப்புமாவு என்று நாம் சொல்வது இன்று நாம் ரொட்டி அல்லது கேக் செய்யும்போது சேர்க்கும் ஈஸ்ட் என்ற பாக்டீரியா, அல்லது புதிதாக அரைத்த மாவு பக்குவம் அடைவதற்காக அதில் சேர்க்கப்படும் உறைமாவு. மாவில் சேர்க்கப்பட்டவுடன் இது செயலாற்றத் தொடங்குகிறது. மாவு நெகிழ்வுத்தன்மை அடையச் செய்கிறது. மாவு எந்த அளவில் இருந்தாலும் புளிக்காரம் செயலாற்றுகிறது. சிறிய தொடக்கம் பெரிய முடிவு. புளிக்காரம் யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தன் வேலையைச் செய்துகொண்டிருக்கும். இதன் வேலையைப் பாதி இரவில் நிறுத்த முடியாது. மாவிலிருந்து இதைப் பிரித்தெடுக்க முடியாது. இது புளிக்கச் செய்த மாவை மீண்டும் பழைய மாவாக மாற்ற முடியாது.
புளிப்புமாவு விவிலியத்தில் எதிர்மறையான பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். லூக் 12:1, 1 கொரி 5:6-8, கலா 5:9). இங்கே நேர்முகப் பொருளில் உள்ளது.
இவ்வுருவகங்கள் இறையாட்சி பற்றிச் சொல்வது என்ன?
காண்பதற்கு சிறிய வடிவம் கொண்டிருந்தாலும் கையில் எடுத்தால் சிறிய அளவில் இருந்தாலும் விதையும் புளிப்புமாவும் தம்மகத்தே நிறைய ஆற்றல் கொண்டவை. இறையாட்சியும் தன்னகத்தே ஆற்றல் கொண்டது. விதையும் புளிப்புமாவும் செயலாற்றும் விதம் நம் கண்களுக்கு மறைவாக இருக்கிறது. இறையாட்சியின் செயல்பாடும் அத்தகையதே. விதையும் புளிப்புமாவும் செயல்படுவதை வெளிப்புறக் காரணிகள் எளிதாகத் தடுக்க இயலாது. இறையாட்சியின் வளர்ச்சிiயையும் யாரும் தடை செய்ய முடியாது. விதையும் புளிப்புமாவும் பயன்படு பொருள்களாக மாறுகின்றன. இறையாட்சி என்பது மனித உறவுகளின் நடவடிக்கைகளின் பயன்பாட்டுத் தளமாகத் திகழ்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்கேற்கிற படைப்பு பற்றி எழுதுகிற பவுல், இரண்டு முக்கியமான சொற்களைப் பயன்படுத்துகிறார்: ‘பேராவல்,’ ‘பேறுகால வேதனை.’ யோவான் நற்செய்தியில் இவற்றையொத்த சொல்லாடல்களை இயேசுவும் பயன்படுத்துகிறார்: ‘பிள்ளையைப் பெற்றெடுக்கும் தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை மறந்துவிடுகிறார்’ (காண். யோவா 16:21).
தோல்வி அடைய விரும்பாத சிறிய முயற்சியே பேறுகால வேதனை. ‘இன்னும் கொஞ்சம்,’ ‘இன்னும் கொஞ்சம்’ என நகரும்போது முயற்சி வெற்றி அடைகிறது. பேராவல் கொள்கிற உள்ளம் பேறுகால வேதனையைத் தாங்கிக்கொள்ளும்.
பூச்செடி ஒன்றைப் பார்க்கிற லெயோனார்டோ டா வின்சி, ‘ஒரு விதை தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி வளர்ந்து, விரிந்து, கிளைகள் பரப்பி, பூ பூக்கிறது எனில், மனிதர்கள் ஏன் தங்கள் முழு ஆற்றலையும் அறியாமல், அறிந்தும் பயன்படுத்தாமல், பயன்படுத்தியும் முழு நிறைவை அடையாமல் இருக்கிறார்கள்?’ எனக் கேள்வி கேட்கிறார்.
கடவுளின் படைப்புகளில் ஒவ்வொன்றும் அதன் முழு இயல்பை இத்தகைய வேதனையின் வழியாகவே அடைகிறது. கடுகு, புளிப்புமாவு, நாம் என அனைவரும் நம்மிலிருந்து நம்மையே விடுவித்து வளர்ந்துகொண்டிருக்கிறோம். ‘காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது தளரா மனத்தோடு காத்திருக்கிறோம்.’
‘எதிர்நோக்கும் தளரா உள்ளமும் கொண்டிருந்தால் சிறியவை பெரியனவாக வளர்ந்து மாற்றம் விளைவிக்கும்.’
நிற்க.
‘இறையாட்சி’ பற்றி மொழிகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘, ‘கிறிஸ்துவே இறையாட்சி. அவரே நம் விருப்பம். அவருக்காகவே நாம் காத்திருக்கிறோம்’ என்று அறிவுறுத்தி (காண். எண் 2816) கிறிஸ்துவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment