இன்றைய இறைமொழி
திங்கள், 30 அக்டோபர் 2023
பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் திங்கள்
உரோமையர் 8:12-17. லூக்கா 13:10-17
கட்டுகளிலிருந்து சுதந்திரம்!
‘உடல்சார்ந்த கட்டுகள் அல்ல, மாறாக, உள்ளம்சார்ந்த கட்டுகளே நம்மை அடிமைகளாக மாற்றுகின்றன!’
ஓய்வுநாளில் தொழுகைக்கூடம் ஒன்றில் இயேசு கற்பித்துக்கொண்டிருக்கிறார். அங்கே பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றியிருந்த பெண் ஒருவருக்கு இயேசு நலம் தருகிறார். இந்த நிகழ்வு முதலில் தொழுகைக்கூடத் தலைவரிடம் எதிர்வினையை உருவாக்குகிறது. அவருடைய உள்ளம்சார்ந்த அடிமைத்தனத்தை எடுத்துச் சொல்கிற இயேசு அவருக்கும் நலம் தருகிறார்.
இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் ஓய்வுநாள் அனுசரிப்பு என்பது சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் வழங்கப்பட்ட நிகழ்வுக்குப் பின்னரே வருகிறது. ஆண்டவராகிய கடவுள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததால் இஸ்ரயேல் மக்களும் ஓய்ந்திருக்க வேண்டும் (காண். விப 20), இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததால் அதை நினைவுகூர்ந்து தங்கள் அடிமைகளுக்கு ஓய்வுதந்து தாங்களும் ஓய்ந்திருக்க வேண்டும் (காண். இச 5) என இரண்டு காரணங்களுக்காக ஓய்வுநாள் அனுசரிக்கப்பட்டது. யூதர்களைப் பொருத்தவரையில் ஓய்வுநாள் என்பது வாரத்தின் இறுதிநாள், சனிக்கிழமை. அந்த நாளில் தொழுகைக்கூடத்;திற்குச் சென்று அவர்கள் வழிபடுவது வழக்கம். மற்ற எந்தவொரு வேலையையும் செய்ய அவர்களுக்கு அனுமதி இல்லை.
இயேசு நலம் தருகிற பெண்ணை மூன்று சொல்லாடல்களால் வர்ணிக்கிறார் லூக்கா: (அ) தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றியவர், (ஆ) பெண், (இ) கூன் விழுந்தவர். இவரைப் பதினெட்டு வருடங்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அல்லது அவர்கள் அவரை அப்படியே பார்த்தே பழகிப் போனார்கள். இயேசுவோ, ‘உமது நோயிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளீர்’ எனச் சொல்லி அவர்மீது தம் கைகளை வைத்து அவருக்கு நலம் தருகிறார். அவர் உடனடியாக நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்கிறார்.
இந்த நிகழ்வுக்கு முதல் எதிர்வினை ஆற்றக்கூடியவர் தொழுகைக்கூடத் தலைவர். இயேசுவிடம் நேரடியாகப் பேசுவதற்குப் பதிலாக மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘வேலை செய்ய ஆறுநாள்கள் உண்டே. அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்!’ என்கிறார். அவரையும் (ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிப்போரையும்), ‘வெளிவேடக்காரரே!’ என அழைக்கிறார் இயேசு. இயேசு நலம் தரக்கூடியவர் என அவர் ஏற்றுக்கொண்டாலும் அதை மக்கள் பயன்படுத்தக்கூடாது என்ற முதல் வெளிவேடம். தங்களுக்குத் தேவையான நேரத்தில் சட்டத்தை மீறிக்கொள்ளலாம் என்ற இரண்டாவது வெளிவேடம்.
இயேசு அவருடைய வெளிவேடத்தைச் சுட்டிக்காட்டியவுடன் எதிரிகள் வெட்கப்படுகிறார்கள். தங்கள் தவற்றை உணர்கிறார்கள். மக்கள் எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தனர். உள்ளத்தில் கூன் விழுந்த தொழுகைக்கூடத் தலைவரும் நலம் பெறுகிறார்.
நம் வாழ்விலும் நாமே அறியாமல் ஏதோ ஒரு நிலையில் கட்டுண்டு நிற்கலாம். உடல் அளவில் சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தாலும், நம் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் கட்டியிருக்கிற நிறைய முடிச்சுகள் இருக்கவே செய்கின்றன. நாம் நினையாத நேரத்தில் நம்மிடம் வருகிற இயேசு நம்மை விடுவிக்கிறார்.
கட்டுகளிலிருந்து கட்டின்மைக்கு எப்படிக் கடந்து செல்வது?
(அ) முதன்மையானவற்றை முதன்மையானவை எனக்கொள்ளல்
தொழுகைக்கூடத் தலைவரைப் பொருத்தவரையில் ஓய்வுநாள் அவருக்கு முதன்மையாக இருந்தது. இயேசுவுக்கோ மானிடரின் நலமே முதன்மையாக இருந்தது. நம் முதன்மைகளைப் பொருத்தே நம் செயல்பாடுகள் இருப்பதால், முதன்மைகளைச் சரிசெய்தல் நலம். நாம் பெறவேண்டிய கட்டின்மை அல்லது சுதந்திரம் நம் முதன்மையாக மாற வேண்டும்.
(ஆ) பரந்துபட்ட பார்வை
நிகழ்வில், தாம் நலம் தருகிற பெண்ணை, ‘ஆபிரகாமின் மகள்’ என அழைக்கிறார் இயேசு. இதே சொல்லாடல் ‘ஆபிரகாமின் மகன்’ என்று சக்கேயுவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். லூக் 19). ஓய்வுநாளும் சட்டங்களும் மோசேயின் காலத்திற்குப் பின்னரே வந்தன. ஆபிரகாமின் காலத்தில் சட்டங்கள் இல்லை. ‘ஆபிரகாமின் மகள்’ என்று சொல்வதன் வழியாக, மோசேயையும் கடந்த பரந்துபட்ட பார்வைக்குத் தம் சமகாலத்தவரை இட்டுச்செல்கிறார் இயேசு. மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளைப் பரந்த கண்ணோட்டம் கொண்டு பார்க்கும்போது நாம் சுதந்திரம் பெறுகிறோம்.
(இ) வெளிவேடம் அகற்றுதல்!
தொழுகைக்கூடத் தலைவர் வெளிவேடம் என்ற அடிமைத்தளையில் இருக்கிறார். இயேசு அவருக்கும் நலம் தருகிறார். நாம் கட்டுகளோடு நின்றுகொண்டே, ‘நான் நன்றாக இருக்கிறேன்!’ என்று சொல்வதே வெளிவேடம். அதை அகற்றதல் வேண்டும். தன் மக்கள் ஆன்மிக விடுதலை பெற உதவி செய்வதே தொழுகைக்கூடத்தலைவரின் பணி. ஆனால், அவர் அத்தகைய விடுதலைக்குத் தடையாக இருக்கிறார். தனிமனித மற்றும் சமூக விடுதலைக்கு உதவுவதே நம்முடைய பணியும் ஆகும்.
இன்றைய முதல் வாசகத்தில், ஊனியல்புக்கும் தூய ஆவியின் இயல்புக்கும் இடையே உள்ள முரணைச் சுட்டிக்காட்டுகிற பவுல், ‘கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்துக்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை. கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்’ எனச் சொல்கிறார். அச்சம் களைகிற எவரும் அடிமைத்தனத்தையும் களைகிறார்.
‘உடல்சார்ந்த கட்டுகள் அல்ல, மாறாக, உள்ளம்சார்ந்த கட்டுகளே நம்மை அடிமைகளாக மாற்றுகின்றன!’
நிற்க.
‘சுதந்திரம்’ அல்லது ‘கட்டின்மை’ பற்றிப் போதிக்கிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி,’ ‘ஒருவர் தொடர்ந்து நன்மைகள் செய்யச் செய்ய அவருடைய சுதந்திரம் அதிகரிக்கிறது. உண்மையான சுதந்திரம் நன்மை செய்வதிலும் நீதியை நிலைநாட்டுவதிலும் வெளிப்படுகிறது. சுதந்திரம் ஒருவருக்குப் பொறுப்புணர்வை வழங்குகிறது’ என மொழிகிறது (காண். எண்கள் 1733, 1734).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment