இன்றைய இறைமொழி. ஞாயிறு, 29 அக்டோபர் ’23. உம்மிடம் அன்புகூர்கிறேன்!

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 29 அக்டோபர் 2023
ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு
விடுதலைப் பயணம் 22:21-27. 1 தெசலோனிக்கர் 1:5-10. மத்தேயு 22:34-40

உம்மிடம் நான் அன்புகூர்கிறேன்!

எரேமியா வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கு உரைக்கிற ஆண்டவராகிய கடவுள், ‘உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன். எனவே, பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன்’ (எரே 31:3) என்கிறார். கடவுள் மானிடர்களைப் பார்த்து, ‘நான் உன்னிடம் அன்புகூர்கிறேன்!’ என்று சொல்லும் பகுதியாக நாம் இதை எடுத்துக்கொண்டால், மானிடர்கள் கடவுளைப் பார்த்து, ‘நான் உம்மிடம் அன்புகூர்கிறேன்!’ என்று சொல்லும் பகுதியே இன்றைய பதிலுரைப்பாடல்.

ஆண்டவரின் அடியாராகிய தாவீது தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் கடவுள் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடுகிற இத்திருப்பாடல் (18): ‘என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கிறேன்!’ (18:1) எனத் தொடங்கி, ‘என்றென்றும் பேரன்பு காட்டுபவர் அவரே!’ (18:50) என ஆண்டவரின் அன்பை மேற்கோள்காட்டி நிறைவு பெறுகிறது.

‘நான் உம்மிடம் அன்புகூர்கிறேன்’ என்னும் சொற்களை இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் பார்க்கும்போது, நாம் ஒவ்வொருவரும், ‘நான் உம்மிடம் அன்புகூர்கிறேன்’ என்று கடவுளை நோக்கிச் சொல்லி அவரை அன்பு செய்யவும், நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்லித் தன்அன்பு செய்யவும், ஒருவர் மற்றவருக்குச் சொல்லி பிறரன்பு காட்டவும் அழைக்கப்படுகிறோம்.

நற்செய்தி வாசகம் கடந்த வார வாசகப் பகுதியின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. வெற்றி ஆர்ப்பரிப்புடன் எருசலேம் நுழைகிற இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்க அவருடைய எதிரிகள் முயற்சி செய்கிறார்கள். பரிசேயர்கள் ஏரோதியருடன் இணைந்து, ‘சீசருக்கு வரி செலுத்துவது முறையா?’ எனக் கேட்டனர். இன்றைய பகுதியில், பரிசேயர்கள் நடுவில் உள்ள திருச்சட்ட அறிஞர், ‘திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?’ எனக் கேட்டுச் சோதிக்கிறார்.

‘போதகரே!’ என்னும் விளியுடன் தொடங்குகிறது உரையாடல். இந்த விளிச்சொல்லே இயேசுவைக் கேலி செய்வது போல இருக்கிறது. ஏனெனில், கலிலேயாவின் சுற்றுப்புறங்களிலிருந்து வந்த தச்சனின் மகன் இவருக்குத் திருச்சட்டம் தெரியுமா? என்ற எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் இருக்கிறது. மேலும், மக்கள் இயேசுவைப் போதகர் எனக் கருதுவதையும் அவர்கள் கேலி செய்கிறார்கள்.

‘திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?’ என்பதை அனைத்து இஸ்ரயேலரும் அறிவர். அதிலும் திருச்சட்ட அறிஞர்கள் சட்டங்களை முழுமையாகக் கற்றறிந்திருப்பதால் அதுபற்றிய அறிவைக் கொண்டிருப்பர். ஆக, இயேசுவின் அறிவைச் சோதிக்கும் விதமாகவே இக்கேள்வி கேட்கப்படுகிறது. இன்னொரு பக்கம், இயேசுவின் சமகாலத்தில் 613 விதிமுறைகள் வழக்கில் இருந்தன. இவை யாவும் பத்துக் கட்டளைகளிலிருந்து தோன்றியவை. பத்துக் கட்டளைகள் ஆண்டவராகிய கடவுளின் சொற்கள். இச்சொற்களுக்கு விளக்கமாகத் தொடங்கிய பாரம்பரியம் இவற்றை ஒட்டி விதிமுறைகளை விரித்துக்கொண்டே போனது. அந்த வகையில், 613 விதிமுறைகளிலிருந்து முதன்மையான ஒன்றை இயேசு எடுத்துக்காட்ட வேண்டும் என அவர்கள் விரும்பியதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களுடைய எண்ண ஓட்டங்களைப் பொருட்படுத்தாத இயேசு அவர்களுக்கு நேரடியாகவே பதிலுரைக்கிறார்.

‘உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’ என்கிறார் இயேசு. இதையே முதன்மையான கட்டளை எனவும் வரையறுக்கிறார். மோசேயின் திருச்சட்டத்திலுள்ள, ‘இஸ்ரயேலே, கேள்!’ (இச 6:4-6) (‘மாபெரும் ஷெமா’ கட்டளை) என்னும் பகுதியை இயேசு மேற்கோள் காட்டுவதாகத் தெரிந்தாலும் இயேசுவின் கூற்றில் முக்கியமான சொல் ஒன்று விடப்படுகிறது. ‘முழு ஆற்றலோடும் அல்லது வலிமையோடும்’ என்னும் சொல்லாடல் தவிர்க்கப்பட்டு, ‘முழு உள்ளத்தோடு’ என்பது ‘முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும்’ என்னும் இரு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ‘இதயம்’ என்பது ‘உணர்வு’, ‘உள்ளம்’ (அல்லது ஆன்மா) என்பது ‘உயிர்,’ ‘மனம்’ என்பது ‘எண்ணம்,’ ‘ஆற்றல்’ என்பது ‘உடல்’ என நாம் எடுத்துக்கொண்டால், நம் உயிர், உணர்வு, எண்ணம், உடல் அனைத்தும் இறைவனை நோக்கியதாக இருக்க வேண்டும்.

‘ஆற்றலோடும்’ (‘உடல்’) என்னும் சொல்லை இயேசு தவிர்த்து, அச்சொல்லை இன்னொரு கட்டளையாக மாற்றுகிறார்: ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!’ (காண். லேவி 19:18). கடவுள்மீது காட்டும் அன்பு நம் உடல் வழியாகப் பிறருக்குக் காட்டப்பட வேண்டும் என்று நாம் இதைப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில், மத்தேயு நற்செய்தியில் ‘பிறரன்பு’ என்பது ‘உடல்சார்ந்த செயல்கள்’ வழியாகவே வெளிப்படுத்தப்படுகிறது: ‘பசித்தோர்க்கு உணவளித்தல், தாகமுற்றவரின் தாகம் தணித்தல், அந்நியரை ஏற்றுக்கொள்தல், ஆடையின்றி இருப்பவரை உடுத்துதல், நோயுற்றிருப்பவரைக் கவனித்துக்கொள்தல், சிறையிலிருப்பவர்களைக் காணச் செல்தல்’ (காண். மத் 25:35-36).

இறையன்பு, பிறரன்பு என்னும் இரு கட்டளைகளை ஒன்றுக்கொன்று இணையாக வைப்பதன் வழியாக, இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கே தாம் வந்தேன் (காண். மத் 5:21-22) என்பதை உறுதிசெய்வதோடு, ‘இறையன்பு’ மட்டும் போதும் எனத் தங்களையே மற்றவர்களிடமிருந்து ஒதுக்கிக்கொண்ட பரிசேயர்களின் மனப்பாங்கையும் கேள்விக்குட்படுத்துகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 22:21-27), ‘உடன்படிக்கைச் சட்டம்’ என்று சொல்லப்படுகின்ற பகுதியில், அன்றைய சமூகத்தில் வாழ்ந்த மூன்றுவகை கையறுநிலை மனிதர்களை ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார்: (அ) அந்நியர்கள், (ஆ) கைம்பெண்கள்-அநாதைகள்,(இ) ஏழைகள். இம்மூவருமே மூன்றுநிலைகளில் பிடுங்கப்பட்ட வேர்கள். நிலம் என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் அந்நியர்கள். அவர்களுக்கு என்னதான் உடைமைகள் இருந்தாலும் அவர்கள் நிற்கின்ற நிலம் அவர்களுடையது அல்ல. உறவு என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் கைம்பெண்கள் மற்றும் அநாதைகள். விவிலியம் பெரும்பாலும் இவ்விருவரையும் இணைத்தே சொல்கிறது. தந்தைவழிச் சமூகத்தில் மனைவியர் கணவரின் சொத்தாகக் கருதப்பட்டார்களே அன்றி, மனைவியர்களுக்கென்று சொத்துகள் எதுவும் இல்லை. மேலும், போர், நெடும்பயணம், ஆபத்துகள் போன்றவற்றால் நிறையக் குழந்தைகள் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்படும் நிலை அன்று இருந்தது. (இ) ஏழைகள். பொருளாதாரம் என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் தங்கள் தேவைகளுக்காக மற்றவர்களிடமிருந்து வட்டிக்குப் பணம் வாங்கினர். இம்மூன்றுவகை கையறுநிலை மக்களையும் அரவணைத்துக்கொள்ளக் கட்டளையிடுகிறார் ஆண்டவராகிய கடவுள்.

லேவி 19:18-இல் ‘அடுத்திருப்பவர்’ என்னும் சொல்லாடல் ‘தனக்கு அடுத்த வீட்டில் வாழும் இஸ்ரயேலர்’ என்பதையே குறித்தது. ஆக, பிறரன்பு என்பது ஒரே இனத்துக்குள் காட்டப்பட வேண்டியதாக இருந்தது. இன்றைய முதல் வாசகம் தேவையில் இருக்கிற அந்நியர்கள், கைம்பெண்கள்-அநாதைகள், ஏழைகள் ஆகியோரும் அடுத்தவர்களே என்று மொழிந்து உள்ளடக்கிய பார்வையைத் தருகிறது.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 தெச 1:5-10), தெசலோனிக்க நகர் மக்களுக்கு நன்றி கூறி மகிழ்கின்ற பவுல், தொடர்ந்து, ‘நீங்கள் எங்களைப் போலவும், ஆண்டவர் போலவும் நடக்கிறீர்கள்’ என வாழ்த்துகிறார். முதலில், பவுலின் நாணயமும் நற்பண்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. ‘ஆண்டவரைப் போல’ இருக்கிறீர்கள் எனச் சொல்கிறார் பவுல். நாம் தேவையில் இருக்கும் போது யாராவது நமக்கு உதவினால், ‘கடவுள் போல வந்து காப்பாற்றினாய்’ என்று வாழ்த்துகிறோம். அதாவது, எந்தவொரு பதிலன்பும் பதிலும் எதிர்பார்க்காமல் முழுமையாக அடுத்தவர் நலனை மட்டுமே எண்ணுதலே ‘ஆண்டவரைப் போல இருத்தல்.’ தெசலோனிக்க நகர் மக்களுடைய நம்பிக்கை அவர்களுடைய இறையன்பின் வெளிப்பாடாகவும், சான்றுபகரக் கூடிய வாழ்க்கை பிறரன்பின் வெளிப்பாடாகவும் அமைந்தது. இவ்வாறாக அவர்கள் மற்ற திருஅவைக் குழுமங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.

இறையன்பு, பிறரன்பு என்னும் இரண்டு கட்டளைகளுக்கு முன்னால், ‘உன்னை அன்பு செய்வது போல’ என்னும் சொற்றொடரில, ‘தன்அன்பு’ அடங்கியுள்ளது. தன்னை அன்பு செய்யாத ஒருவர் தனக்குப் பெரிய கடவுளையோ, அல்லது தனக்குச் சமமான பிறரையோ அன்பு செய்தல் அரிது.

‘உன்மீது அன்புகூர்வது போல அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!’ என இங்கே சொல்கிற இயேசு, தம் இறுதி இராவுணவில், ‘நான் உங்களிடம் அன்புசெலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புசெலுத்துங்கள்’ (யோவா 13:34) என்னும் புதிய கட்டளையைக் கொடுக்கிறார்.

இறையன்பு, தன்அன்பு, மற்றும் பிறரன்பு என்னும் மூன்று அன்பு நிலைகளை, ஒரு மரத்தின், ‘வேர்,’ ‘தண்டு,’ மற்றும் ‘கிளை‘ என நாம் உருவகித்துக்கொள்ளலாம். இறையன்பு நமக்கு வேராக இருக்கின்றது. தன்அன்பில் நாம் ஒரு தண்டு போல வளர்கிறோம். ‘கிளை’ என்பது நாம் இந்த உலகில் பலன் கொடுக்கும் நிலையைக் குறைக்கிறது.

கவ்ர் கோபால் தாஸ் என்னும் ஆன்மீக வழிகாட்டி, மூன்று ‘C’ பற்றிப் பேசுகின்றார். இம்மூன்றையும் நாம் எப்போதும் மனத்தில் வைத்திருக்க வேண்டும் என்கிறார் குரு: (அ) ‘கனெக்ஷன்’ (connection) (தொடர்பு), (ஆ) ‘கல்டிவேஷன்’ (cultivation) (வளர்ப்பு), மற்றும் (இ) ‘கான்ட்ரிப்யூஷன்’ (contribution) (பங்களிப்பு). இம்மூன்றையும், நாம் மேற்காணும் மூன்று அன்புநிலைகளுக்கு ஒப்பிட்டால், நாம் இறையன்பின் வழியாக நம் கடவுளிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, தன்அன்பின் வழியாக என்னையே நான் உருவாக்கிக் கொண்டு, பிறரன்பின் வழியாக என் பங்களிப்பை நான் மற்றவர்களுக்குக் கொடுத்தால் என் வாழ்வு இனிய வாழ்வாகும்.

இன்று நாம் கடவுளையும், நம் ஒவ்வொருவரையும், ஒருவர் மற்றவரையும் பார்த்து, ‘நான் உம்மிடம் அன்புகூர்கிறேன்!’ எனச் சொல்வோம்.

இப்படி நாம் கூறும் சொற்கள் செயல்களாக மாற வேண்டுமெனில் பின்வரும் தடைகள் களையப்பட வேண்டும்:

(அ) இறையன்புக்கான தடைகள்: ஐயம், இறைமறுப்பு எண்ணம், இறுமாப்புநிறை உள்ளம், பாவம், கடவுள்பற்றிய புரிதல் இல்லாமை, கடவுள் பற்றிய பிறழ்வுபட்ட புரிதல் கொண்டிருத்தல்.

(ஆ) தன்அன்புக்கான தடைகள்: தாழ்வு மனப்பான்மை, நிறைவாக இருக்க வேண்டும் என்னும் நிர்பந்த எண்ணம், ஒப்பீடு, எதிர்மறையான தன்னுரையாடல், எதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகள், சமூக அழுத்தம்.

(இ) பிறரன்புக்கான தடைகள்: பயம், முற்சார்பு எண்ணம், கண்டுகொள்ளாமை, வன்மம், பகைமை, கோபம், தன்மைய எண்ணம், பொறாமை, பாதுகாப்பின்மை உணர்வு, நேரமின்மை.

அன்பு என்பது வெறும் இதயம், உள்ளம், மனம் சார்ந்தது அல்ல, மாறாக, ஆற்றல் சார்ந்தது என்பதை நினைவுகூர்ந்து, அன்பே செயலாக நம் வாழ்வில் மாறினால் எத்துணை நலம்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment