இன்றைய இறைமொழி
வெள்ளி, 20 அக்டோபர் 2023
பொதுக்காலம் 28-ஆம் வாரத்தின் வெள்ளி
உரோமையர் 4:1-8. லூக்கா 12:1-7
அஞ்சாதீர்கள்!
‘ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்’ என்று தொடங்கும் இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார் என்பதையும், மக்களை தம்மிடம் ஈர்க்கும் அவருடைய ஆற்றலையும் கண்டுணர முடிகிறது.
இயேசுவின் சமகாலத்தில் அவருடைய போதனைகள், வல்ல செயல்கள், பயணங்கள் நிறைய சலனங்களைச் சமூகத்தில் ஏற்படுத்தினர். சிலர் நேரடியாக அவரை எதிர்த்தார்கள் அல்லது அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தார்கள். சிலர் முணுமுணுத்துக்கொண்டே தங்கள் வழி நடந்தார்கள். அவர்களுடைய எதிர்ப்பு இயேசுவைப் பாதிக்கவில்லை. ஆனால், அவரைப் பின்பற்றிய சீடர்களைப் பாதித்தது. சிலர் எதிரிகள்மேல் அச்சம் கொண்டு இயேசுவை விட்டு விலகினார்கள். சிலர் வெளிப்படையாக இயேசுவை ஏற்றுக்கொண்டு மறைசாட்சியம் தழுவினார்கள். பெரிய குழுவினரோ வெளிப்படையாக இயேசுவைப் பின்பற்றாமல், அல்லது அவரை இறைமகன் என ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்குள் மறைமுகமாக அதை வைத்துக்கொண்டார்கள். இப்பின்புலத்தில் இன்றைய நற்செய்தி வாசகத்தைப் புரிந்துகொள்வோம்.
‘பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்புமாவு பற்றி எச்சரிக்கையாக இருங்கள்’ என்கிறார் இயேசு. விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாக இருக்கிறது என நேர்முகமாகப் பேசுகிற இயேசு (காண். லூக் 13:20-21), இங்கே ‘புளிப்பு மாவு’ என்பதை எதிர்மறைப் பொருளில் தருகிறார். பவுலும் தன் திருமுகத்தில் இச்சொல்லாடலை எதிர்மறைப் பொருளில் கையாளுகிறார்: ‘சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே, புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள் … பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக, நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக’ (காண். 1 கொரி 5:6-8).
வெளிவேடமாகிய புளிப்புமாவு என இயேசு குறிப்பிட்டுச் சொல்கிறார். புளிப்பு மாவு நல்ல மாவையும் புளிப்பாக்குகிறது. புளிப்பு அடைந்த மாவை மீண்டும் நல்ல மாவாக மாற்ற இயலாது. புளிப்பு மாவு செயல்படும் விதம் கண்களுக்குத் தெரியாது. பரிசேயர்களுடைய வெளிவேடம் தம் சீடர்களைப் பாதிக்கக் கூடாது எனவும், கண்களுக்குத் தெரியாமல் பரவிவரும் வெளிவேடம் குறித்துத் தம் சீடர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார் இயேசு.
தொடர்ந்து, ‘அஞ்சுங்கள்!,’ ‘அஞ்சாதீர்கள்!’ என அவர்களுக்குத் திடம் திருகிறார். ‘அச்சம்’ என்னும் சொல் இங்கே ஐந்துமுறை பயன்படுத்தப்படுகிறது: (அ) ‘உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்’, (ஆ) ‘யாருக்கு அஞ்ச வேண்டுமென …,’ (இ) ‘நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே அஞ்சங்கள்,’ (ஈ) ‘அவருக்கே அஞ்சுங்கள்,’ (உ) ‘அஞ்சாதீர்கள் … சிட்டுக்குருவிகள் பலவற்றை விட …’
அச்சம் என்பது ஒரு நடுநிலையான உணர்வு. நேர்முகமான அச்சம் நம்மை கவனமுள்ளவர்களாகவும் பொறுப்புடையவர்களாகவும் மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, சாலையில் செல்லும்போது எதிர்வரும் வாகனங்கள் பற்றிய அச்சம் நாம் கவனமாகச் செல்லத் தூண்டுகிறது. தேர்வு பற்றிய அச்சம் நம்மை நன்றாகப் படிக்கச் செய்கிறது. வறுமை பற்றிய அச்சம் நம்மை நன்றாக உழைக்கத் தூண்டுகிறது. எதிர்மறையான அச்சம் நம்மை முடக்கிப் போடுகிறது. எடுத்துக்காட்டாக, பொதுவெளியில் பேசுவதை அச்சமாகக் கருதுகிற குழந்தை இறுதிவரை பொதுவெளியைக் கண்டு பயப்படுகிறது. அந்நியர்களைப் பற்றிய அச்சம் அவர்களைப் பற்றிய முற்சார்பு எண்ணங்களை உருவாக்குகிறது.
இயேசு இங்கே மேற்காணும் இருவகையான அச்ச உணர்வுகள்பற்றியும் அறிவுறுத்துகிறார். மேலும், யாருக்கு அஞ்ச வேண்டும் எனவும் யாருக்கு அஞ்சத் தேவையில்லை எனவும் கற்பிக்கிறார்.
(அ) மனிதர்களின் வலிமை வரையறைக்கு உட்பட்டது. உடலை மட்டுமே அவர்களால் கொல்ல இயலும். ஆக, அவர்களுக்கு நாம் அஞ்சத் தேவையில்லை.
(ஆ) கடவுள் நம்மை நடுத்தீர்க்க வல்லவர். அவருக்கு நாம் அஞ்ச வேண்டும்.
(இ) கடவுள் நம்மைப் பராமரிக்கிறார். எப்படி? இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா? எனக் கேட்கிறார் இயேசு. ‘காசுக்கு இரண்டு குருவிகள்’ (காண். மத் 10:29-31) என்பது இயேசுவின் காலத்து விற்பனை வழக்கு. இரண்டு காசுக்கு நான்கு குருவிகள். எங்கே இருந்து வந்தது ஐந்தாவது குருவி? ஐந்தாவது குருவி என்பது சோதனைக் குருவி. அதாவது, குருவிகளின் நலம் காண்பதற்காகப் பறக்கவிடப்படும் குருவி. அப்படிப் பறக்கவிடப்படுகிற குருவியையும் பாதுகாக்கிறவர் நம் கடவுள். நாம் சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள் என்பதை நாம் உணர்ந்தால் போதும்!
மூன்று பாடங்கள் இன்று:
(அ) வெளிவேடம் என்னும் புளிப்புமாவு நம் நம்பிக்கை வாழ்வை ஊடுருவாத வண்ணம் நாம் கவனமாக இருத்த் வேண்டும்.
(ஆ) கடவுளுக்கு அஞ்ச வேண்டும். அடிமைத்தனமான அச்சத்துடன் அல்ல, மாறாக, பிள்ளைக்குரிய அச்சத்துடன் கடவுளை நாம் அணுகிச்செல்தல் வேண்டும். ‘ஆண்டவர்மீது கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்’ (நீமொ 9:10). முதல் ஏற்பாட்டு யோசேப்பு எந்நிலையிலும் ஆண்டவருக்கு அஞ்சுபவராக இருந்தார்.
(ஆ) கடவுள் நமக்கு ஆற்றும் பராமரிப்புச் செயல்களை நினைவில்கொள்ள வேண்டும். நம் தலைமுடிகள் எண்ணப்பட்டுள்ளன. அவர் நம் தலையோடு நெருக்கமாக நின்று நம்மைக் காத்துவருகிறார். சிட்டுக்குருவிகளை விட நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். நம் உள்ளமும் சிட்டுக்குருவியின் உள்ளத்தைப் போல இருந்துவிடக் கூடாது.
இன்றைய முதல் வாசகத்தில், ‘ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார். அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்’ என, ஆபிரகாமை நம்பிக்கையின் மாதிரியாக முன்மொழிகிறார் பவுல். ஆபிரகாம் கடவுள்மேல் கொண்டிருந்த அச்சம் அவருடைய நம்பிக்கை மற்றும் பற்றுறுதியாக வெளிப்பட்டது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment