இன்றைய இறைமொழி வியாழன், 19 அக்டோபர் 2023

இன்றைய இறைமொழி 
வியாழன், 19 அக்டோபர் 2023
பொதுக்காலம் 28-ஆம் வாரத்தின் வியாழன்
உரோமையர் 3:21-30. லூக்கா 11:47-54

பொறுப்பேற்பும் அதிகாரமும்

‘பொறுப்புத் துறப்பு அல்ல, மாறாக, பொறுப்பேற்பே நம்பிக்கை வாழ்வில் நமக்கு அதிகாரம் வழங்குகிறது’

வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் 1906-ஆம் ஆண்டு பேசி, 1962-இல் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் வழியாகப் பிரபலமான ஒரு வாக்கியம் இது: ‘அதிகாரம் அதிகமாகும்போது பொறுப்பு அதிகமாகும்’ (‘With great power comes great responsibility’). அரசியல் அதிகாரம் என்னும் பின்புலத்தில் உருவான வாக்கியம் இது. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இக்கூற்றைச் சற்றே மாற்றி அமைத்து, ‘பொறுப்பு அதிகமாகும்போது அதிகாரம் அதிகமாகும்’ (‘With great responsibility comes great power’) என்கிறார்.

இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்களும் திருச்சட்ட அறிஞர்களும் சமய மற்றும் சமூக அதிகாரங்களைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் அதிகாரங்களைப் பெற்றிருந்தாலும் பொறுப்பற்றவர்களாக இருந்தார்கள். மூன்று நிலைகளில் அவர்கள் பொறுப்பற்று இருந்தார்கள் என இயேசு சுட்டிக்காட்டுகிறார்: (அ) தங்களுக்குக் கடவுளின் செய்தியைக் கொண்டு வந்த இறைவாக்கினர்கள் தங்களுக்கு உகந்த செய்தியைக் கொண்டுவராததால் அவர்களைக் கொலை செய்தார்கள். (ஆ) கொலை செய்யப்பட்டவர்களுக்கு மரியாதை அளிப்பதாக நினைத்து நினைவுச் சின்னங்கள் அமைத்தவர்கள் தொடர்ந்து தங்கள் கண்முன் நின்ற இறைவாக்கினரை (இயேசுவை) ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். தங்கள் முன்னோர்கள் பழைய இறைவாக்கினர்களுக்குச் செய்ததையே இவர்கள் இயேசுவுக்கும் செய்ய நினைக்கிறார்கள். (இ) தங்களிடமிருந்த அறிவுப் பெட்டகத்தின் திறவுகோலைப் பயன்படுத்தி தாங்களும் அறிவு பெறவில்லை, மற்றவர்களுக்கும் அறிவு புகட்டவில்லை.

இவர்கள் அதிகாரத்தைப் பெற்றிருந்தாலும் பொறுப்பற்றவர்களாக இருந்தார்கள். ஆக, நாம் கொண்டிருக்கும் அதிகாரத்தால் நமக்கு பொறுப்பு வருகிறது என்பதை விட, நாம் அதிகாகப் பொறுப்பேற்கும்போது அதிகமாக அதிகாரம் பெறுகிறோம்.

சிறிய எடுத்துக்காட்டு வழியாகப் புரிந்துகொள்வோம். புதிய மொழி ஒன்றைக் கற்கும்போது நமக்கு முதல் வாரம் மிகவும் சிரமமாக இருக்கிறது. மொழியின் இலக்கணம், உச்சரிப்பு, சொற்கள் முதலில் நமக்குப் பிடிபடுவதில்லை. மொழி கற்றலை விட்டுவிடலாம் என்னும் எண்ணமும் சில நேரங்களில் வருவதுண்டு. ஆனால், நம் கற்றலுக்கு நாம் பொறுப்பேற்று தொடக்கத்தில் இருபது முதல் முப்பது மணிநேரங்கள் மொழியோடு செலவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த மொழியின்மேல் நமக்கு அதிகாரம் வருகிறது. பொறுப்பேற்கும் செயல் நமக்கு அதிகாரத்தைத் தருகிறது.

பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்கள் தங்களுடைய சமய, சமூகப் பொறுப்புகளைத் தவிர்த்து, அதிகாரத்தை மட்டுமே பற்றிக்கொண்டார்கள்.

இன்னொரு நிலையில், அவர்கள் பொறுப்பு துறந்தார்கள். நாம் காணும் விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா, வாசிக்கும் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் அனைத்தும் ‘பொறுப்புத் துறப்பு வாக்கியங்களோடு’ (disclaimer notices) வருகின்றன. சட்டம் சார்ந்த நிலையில் ஒருவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட பொறுப்புத் துறப்பு வாக்கியம், ஒரு வகையில் நம் பொறுப்புணர்விலிருந்து விலகிக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது.

ஆனால், நம்பிக்கை வாழ்வில் அல்லது ஆன்மிக வாழ்வில் பொறுப்புத் துறப்பு அல்ல, மாறாக, பொறுப்பு ஏற்பே நம்மை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.

ஆக, இரு பாடங்கள்:

ஒன்று, நம் நம்பிக்கை வாழ்வில் நம்முடைய பொறுப்புணர்வின் அளவு என்ன? கடவுளுக்கும் நமக்குள் உள்ள உறவு வாழ்வில் நாம் கொள்ளும் பொறுப்புணர்வு உறவுநிலையில் நமக்கு அதிகாரம் தருகிறது.

இரண்டு, பொறுப்புத் துறப்பு விடுத்து, பொறுப்பு ஏற்கும் மனநிலை நம் நம்பிக்கை வாழ்விலும் உலக வாழ்விலும் நம் வளர்ச்சிக்குத் துணைநிற்கும்.

முதல் வாசகத்தில், ‘நம்பிக்கையின் வழியாகவே கடவுள் ஒருவரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்’ என உரோமைத் திருஅவைக்கு எழுதுகிறார் பவுல். திருச்சட்டம் சார்ந்த செயல்கள் அல்ல, மாறாக, நம்பிக்கையால்தான் நாம் நேர்மையாளர்களாக மாறுகிறோம் என்னும் கருத்துருவை இவ்வாறாக ஆழப்படுத்துகிறார். கடவுள்மேல் கொள்ளும் நம்பிக்கை நம்மை அவருக்கு நம்மை ஏற்புடையவராக்குகிறது. 

நம்பிக்கை வாழ்வில் பொறுப்புணர்வுடன் வளர்வது எப்படி?

நம்பிக்கை என்பது நாம் ஞாயிறு மற்றும் திருநாள் திருப்பலிகளில் அறிக்கையிடும் வெறும் கோட்பாடு அல்ல, மாறாக, கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவின் அர்ப்பணம். அவருடைய கைகளில் நம் கரத்தைக் கொடுத்துவிட்டு நம் கண்களை மூடிக்கொள்ளும் துணிச்சல். 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment